ஈரோடு ஆக. 1:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்மாறு மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு அதிக அளவில் வெளியே வருவதால் இந்த தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் கூறியதாவது,மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அடர்த்தியாக ஒரே இடத்தில் தொற்று பரவல் இல்லை. வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள், குறிப்பாக மக்கள் அதிக நடமாட்டம் உள்ள மார்க்கெட்டுகள், வணிக வளாகங்களுக்கு சென்று வருபவர்கள் தான் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. வீட்டை விட்டு மக்கள் தேவையின்றி வெளியேறுவதால் பாதிப்பு அதிகரித்துள்ளது. பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 17 லட்சம் பேர் உள்ளனர். இதில் இதுவரை 6 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் மட்டும் 40 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லாமல் இருத்தல், தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவது, வெளியூர்களுக்கு செல்வது உள்ளிட்டவைகளை தவிர்ப்பது அவசியமாகும். இவ்வாறு சவுண்டம்மாள் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today