ஈரோடு ஆக 24:

நகைகளின் தரம், விற்பனை செய்யப்பட்ட இடத்தை உறுதி செய்யும் வகையில் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. அத்துடன், ‘ஹால்மார்க் யுனிக் ஐ.டி’ என்ற, இரு ஆங்கில எழுத்து, நான்கு எண்கள் என, ஆறு இலக்க பதிவும் ஒவ்வொரு நகையிலும் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஹால்மார்க் விதிகளுக்கு நகைக்கடை உரிமையாளர்கள் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த புதிய விதிமுறைகள் காலதாமதம் ஏற்படுவதாக கூறியுள்ளனர். இந்த புதிய ஹால்மார்க் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட நகை கடைகள் இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை அனைத்து நகைக் கடைகளும் மூடப்பட்டு இருந்தது. பின்னர் 11.30 மணிக்கு பிறகு மாலை வரை வழக்கம்போல் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. இது குறித்து ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் தர்மராஜ் கூறியதாவது:-தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்தில் 24 மாவட்டத்தில்தான் ஹால் மார்க் மையம் உள்ளன.

இதனால் ஹால் மார்க் முத்திரை, ஐ.டி., பதிவுக்கு போதிய அளவு மையம் இன்றி, திரும்ப பெற தாமதம் ஆகிறது. தாலி உள்ளிட்ட பல நகைகளை நல்ல நாள், நல்ல நேரத்தில் கொடுத்து, நல்ல நேரத்தில் திரும்ப பெற விரும்புகின்றனர். அவர்களுக்கு உரிய பதிவுடன் வழங்க இயலாததால் பிரச்னை எழுகிறது. வடமாநிலங்களில் குந்தன், போல்கி, ஜடாவ், மீனாபாரி போன்ற நகைகளுக்கு ஹால் மார்க், ஐ.டி., பதிவில் விலக்கு கொடுத்துள்ளனர். மாங்கல்யம் போன்றவைகளுக்கும் விலக்கு கோரினால், வழங்க மறுக்கின்றனர்.

தங்க நகைகளுக்கான டாஸ்க் போர்ஸ் கமிட்டி, உயர் மட்ட குழு, கிரிவென்ஸ் கமிட்டி’ போன்றவைகளில் மொத்த நகை வியாபாரிகளை மட்டுமே உறுப்பினாராக்கி உள்ளனர். அதிக எண்ணிக்கையில் உள்ள நகைக்கடை வியாபாரிகள் தரப்பில் உறுப்பினர் அங்கீகாரம் இல்லை. இதனால், எங்கள் கோரிக்கைகளை கொண்டு செல்ல முடியவில்லை.

எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேசிய அளவில் பல்வேறு வகை நகைக்கடைகள், நகை வியாபாரிகள் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நமது மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் காலை, 9 மணி முதல் 11:30 மணி வரை கடைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

எங்கள் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பி அமைக்க உள்ளோம். இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் தற்போது முகூர்த்த நாள் என்பதால் 2.30 மணி மட்டும் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். இவ்வாறு  அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today