பவானி சூலை 16:

பவானி தாலுகா ஊராட்சிகோட்டை அடுத்த வரதநல்லுார் காவிரி ஆற்றில்இருந்து ரூ.484.45 கோடியில் அம்ரூத் திட்டத்தில் ஈரோடு மாநகராட்சிக்கான தனி குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது,ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து பல்வேறு இடங்களில் நீர் எடுத்து 69.28 மில்லியன் லிட்டர் நீர் தினமும் வழங்க திட்டமிடப்பட்டது. 5.35 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில் 47.20 மில்லியன் லிட்டர் நீர் வினியோகித்தனர். தற்போது அளவு குறைந்து 34 மில்லியன் லிட்டர் நீர் மட்டும் மாநகர பகுதிக்கு வழங்கப்படுகிறது. தனி நபருக்கு 64 லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்படுகிறது. வரதநல்லுாரில் இருந்து புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் மூலம் தினமும் 408 லட்சம் லிட்டர் நீர் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் தினமும் ஒவ்வொரு நபருக்கும் தினமும் 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது, இவ்வாறு கூறினார். பின்னர் பவானி யூனியன் அலுவலக புதிய கட்டட கட்டுமான பணி, ஊரக சாலைப்பணி, பள்ளி கட்டடம், 100 நாள் வேலை திட்டப்பணி போன்றவைகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், பவானி நகராட்சி ஆணையாளர் லீனா சைமன், குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் பொன்னுசாமி, மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், பவானி நகராட்சி பொறியாளர் கதிர்வேல், பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முகசுந்தரம், பி.டி.ஓ.,க்கள் மாரிமுத்து, சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today