ஈரோடு டிச 25:

ஈரோடு அருகே 46 புதூர் பகுதியையொட்டி சஞ்சய் நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சில நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, சஞ்சய் நகர் முதல் குறுக்கு சந்து பகுதியில் வசித்து வரும் கொற்றவேல் என்பவருடைய வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் மர்ம விலங்கு ஒன்றின் நடமாட்டம் பதிவாகி இருந்தது.

இது தொடர்பான தகவல்கள் வெளியானதும், ஈரோடு வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் சி.சி.டி.வி. கேமராவை முழுமையாக ஆய்வு செய்து, கேமராவில் பதிவாகி இருந்தது மரநாய் என்பதை கண்டறிந்ததுடன், அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்பதையும் எடுத்துக்கூறினர்.

இதையடுத்து பொதுமக்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் சஞ்சய் நகர் செய்தியும், அத்துடன் ஒரு வீடியோ காட்சியும் இணைத்து பகிரப்பட்டது. அதில் ஒரு வீட்டில் உள்ள நாய் குரைத்துக் கொண்டு இருக்கிறது. திடீரென்று வெளியில் எதையோ பார்த்து நாய் பயந்து ஓடுகிறது. அடுத்த வினாடி இரும்பு கதவையும் தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டு வளாகத்துக்கு வருகிறது.

சில வினாடிகளில் குரைத்துக் கொண்டு இருந்த நாய் கழுத்தை கவ்வி கொண்டு சிறுத்தை ஒரே பாய்ச்சலில் மதில் சுவரை தாண்டி ஓடுகிறது. இந்த காட்சி ஈரோடு சஞ்சய் நகர் குடியிருப்பு பகுதியில் நடந்தாக செய்தி பகிரப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று இரவு ஈரோடு வனச்சரகர் ரவீந்திரநாத், ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா ஆகியோர் கொண்ட வனத்துறை மற்றும் காவல்துறையினர் சஞ்சய் நகர் பகுதிக்கு விடிய விடிய ஆய்வு மேற்கொண்டனர்.

அங்கு ஏற்கனவே வீடியோ பதிவாகி இருந்த கொற்றவேல் வீட்டுக்கு சென்று கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டது போன்ற எந்த காட்சியும் அதில் பதிவாகவில்லை. அதுமட்டுமின்றி, வீடியோவில் வரும் வீடு அந்த பகுதியிலேயே இல்லை என்பது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு வனச்சரகர் ரவீந்தரநாத் கூறியதாவது: சமீபத்தில் சஞ்சய் நகர் செய்தியுடன் இணைத்து பகிரப்பட்டு வரும் வீடியோ படம் வேறு எங்கோ எடுக்கப்பட்டது. ஈரோடு குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உள்ளிட்ட எந்த மர்ம விலங்கின் நடமாட்டமும் இல்லை. ஏற்கனவே வீடியோவில் பதிவானது மரநாய் என்று கண்டறியப்பட்டது.

தற்போது படத்தை மாற்றி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வேறு காட்சியை இணைத்து பகிர்ந்த வதந்தி பரப்பிய நபரின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர் மீது சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். இவவாறு அவர் கூறினார். https://www.forests.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today