ஈரோடு நவ 18:
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்திட கோரி ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கடைகளை அடைத்து நேற்று முதல் 2 நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜவுளி உற்பத்தி தொழிலில் ஈடுபடும் வியாபாரிகள் ஜவுளிகளை உற்பத்தி செய்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி, இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை நூல் விலையை நிர்ணயம் செய்ய ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் நேற்றும், இன்றும் கடை அடைப்பு நடத்தப்படும் என ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். இதன்படி, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோட்டில் நேற்று 4ஆயிரம் ஜவுளி உற்பத்தியாளர்கள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கூறியதாவது: நூல் விலை உயர்வால் நாங்கள் உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்ய முடியவில்லை. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூல் வியாபாரிகள் சங்கம், ஜவுளி உற்பத்தி, விற்பனை சார்ந்த கடைகள், குடோன்கள், பிளீச்சிங், டையிங் உரிமையாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள், ஸ்கிரீன் பிரிண்டிங் உள்பட 18 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எங்களது போராட்டத்தின் காரணமாக ரூ.30 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினார்.
ஜவுளி சந்தை வியாபாரிகளும் ஆதரவுநூல் விலை உயர்வை கண்டித்து இன்று நடந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு கனி மார்க்கெட் (தினசரி ஜவுளி சந்தை) அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து இன்று ஒரு நாள் மட்டும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஜவுளி சந்தையில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்பட்டிருந்தது. https://www.spc.tn.gov.in
நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/