பெருந்துறை சூன் 14: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளகத்தில் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய 400 படுக்கை வசதி, அலுவலகம் உள்ளிட்டவை கொண்டு புதிய கட்டட கட்டுமான பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார். பின், நிருபர்களிடம் அமைச்சர் சு.முத்துசாமி கூறியது:ரோட்டரி சங்கம் சார்பில் கூடுதலாக 400 படுக்கை வசதியுடனான கட்டடம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணியை விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணி முடிந்ததும், கொரோனா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படும் 400 நோயாளிகள் இங்கு அனுமதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.நேற்று வரை ஈரோடு மாவட்டத்தில் 76 ஆயிரத்து 260 பேர் கொரானாவால் பாதித்து 64 ஆயிரத்து 397 பேர் குணமடைந்துள்ளனர். 11 ஆயிரத்து 371 பேர் சிகிச்சையில் உள்ளனர். வீடுகளில் 7,515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்னர். இதுவரை 8 லட்சத்து 21 ஆயிரத்து 246 பேர் கொரானா பரிசோதனை செய்துள்ளனர். 2.55 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.மாவட்ட அளவில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 932 படுக்கை, ஈரோடு அரசு மருத்துவமனையில், 608 படுக்கை பிற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை படுக்கை என 2 ஆயிரத்து 19 படுக்கையில் 282 ஆக்சிஜன் படுக்கை, 169 ஆக்சிஜன் அல்லாத படுக்கை, 10 தீவிர சிகிச்சை படுக்கைகள் காலியாக உள்ளன. மற்றவற்றில் கொரானா நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.இவ்வாறு கூறினார்.ஈரோடு எம்.பி., கணேசமூர்த்தி, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மணி ஆகியோர் பங்கேற்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே