ஈரோடு சூலை 2: ஈரோடு பவானி சாலையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி நுால் பதனிடும் ஆலையில் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான யூனிபார்ம் ஒரு கோடியே 27 லட்சம் மீட்டர் ஆர்டர் பெறப்பட்டு 40 சதவீதம் பணிகள் நிறைவடைந்தது.
தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் கைத்தறி துறை மூலம் இயங்கும் தமிழ்நாடு கூட்டுறவு துணி, நூல் பதனிடும் ஆலை உள்ளது. இங்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் உள்ள அரசு பள்ளி யூனிபார்ம், அரசு போக்குவரத்து ஊழியர்கள், மின் துறை, போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறை யூனிபார்ம் ஆர்டரின் பேரில் உற்பத்தி செய்து பிராசசிங் செய்து வழங்குகின்றனர்.தற்போது தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கான யூனிபார்ம் உற்பத்தி பணி நடக்கிறது.
இதுபற்றி இந்த ஆலையின் தலைவர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., கே.எஸ்.தென்னரசு கூறியது,ஆலையில் தினமும் ஒரு லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்து பதப்படுத்தி, பிரிண்டிங் உள்ளிட்ட அனைத்து பணியையும் நிறைவு செய்ய முடியும். ஆண்டு முழுவதும் இந்த ஆலை செயல்படும். கொரோனாவுக்கான ஊரடங்கால் 30 நாட்கள் ஆலை இயங்கவில்லை. அரசின் தளர்வால் மீண்டும் இயங்குகிறது.

பள்ளி கல்வித்துறை மூலம், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்கான யூனிபார்ம் சட்டை, பேன்ட், சுடிதார், டாப்ஸ் உள்ளிட்டவை உற்பத்தி செய்ய 1.27 கோடி மீட்டர் ஆர்டர் பெறப்பட்டுள்ளது. இதுவரை, 40 சதவீத பணிகளுக்கு மேல் நிறைவு செய்து வழங்கிவிட்டோம். கடந்த, 30 நாட்கள் ஊரடங்கால் விடுமுறை விடுக்கப்பட்டதால், 30 லட்சம் மீட்டர் வரை துணி உற்பத்தி பணி பாதித்துள்ளது. இருப்பினும் உற்பத்தியை விரைவு செய்து வழங்க பணிகள் நடக்கிறது.
ஆலை வளாகத்தில் நூல் உற்பத்தி, டையிங் செய்வதற்கான கூடுதல் இயந்திரங்கள் அமைக்க இடவசதி உள்ளது. அதற்கான திட்டத்தை அரசிடம் வழங்கி உள்ளோம். தற்போதைய சூழலில் கூடுதலாக, 100 பணியாளர்கள் தேவைப்படுகிறது. அவர்களை நியமித்தால் கூடுதல் பணிகளை நிறைவு செய்ய ஏதுவாகும், என அரசிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே