ஈரோடு சூன் 23: ஈரோடு அருகே, செம்மாம்பாளையத்தில் ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம், கருமாண்டிசெல்லிபாளையத்தில் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், கருங்கல்பாளையத்தில் ஈரோடு சொசைட்டி, மணிக்கூண்டு அருகே கோபி சொசைட்டி என நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது. தினமும் நான்கு இடங்களிலும் சேர்த்து 3 ஆயிரத்து 500 மூட்டை மஞ்சள் விற்பனையாகும். கொரோனா ஊரடங்கால் கடந்த மே 7 ம் தேதிக்குப்பின் ஏலம் நடக்கவில்லை. 40 நாட்களுக்குப்பின் நேற்று மீண்டும் மஞ்சள் ஏலம் நான்கு இடங்களிலும் துவங்கியது.இதுபற்றி ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் குடோன் உரிமையாளர் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியது,ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டு, 40 நாட்களுக்கு பின் மஞ்சள் ஏலம் நடக்கிறது. தற்போது மஞ்சள் நடவுப்பணி நடப்பதால் பல விவசாயிகள், மஞ்சளை விற்பனை செய்ததன் மூலம் கிடைக்கும் தொகையை விவசாயத்துக்கு பயன்படுத்த உதவும் என்ற நோக்கில், ஏலம் துவங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் மஞ்சள் ஏலம் கடந்த சில நாட்களாக நடக்கிறது. ஊரடங்குக்கு முன்பு ஒரு குவிண்டால் மஞ்சள் 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்தது. தற்போது 500 ரூபாய் கூடுதலாக விற்பனையாகிறது.வரும் நாட்களில் புதிய மஞ்சள் நடவு, ஏற்றுமதி, உள்ளூர் விற்பனைக்காக மஞ்சள் கொள்முதல் போன்றவற்றுக்கு ஏற்ப விலை உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு கூறினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே