ஈரோடு டிச 31:

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்ய 3.11 லட்சம் மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் திட்டம் ஈரோடு மாவட்டத்தில் வேளாண்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் மரக்கன்றுகள் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக 3.11 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி கூறியதாவது,

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு புதிய வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் தேக்கு, மகோகனி, வேம்பு, மலைவேம்பு, நாவல், புளி, பெருநெல்லி, செம்மரம், அசோகா ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 லட்சத்து11 ஆயிரம் மரக்கன்றுகள் ரூ.46.77 லட்சம் மதிப்பீட்டில் விநியோகிக்கப்படுகிறது. இதுவரை பட்டாநிலங்களில் மரக்கன்றுகள் பெற பதிவு செய்யாத விவசாயிகள் உடனடியாக அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகிப் பதிவு செய்து, உடனடியாக மரக்கன்றுகளை அந்தியூர் மற்றும் அரச்சலூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான நாற்றாங்கால்களிலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கன்றுகள் நடவு செய்த பின்பு 2ம் ஆண்டில் இருந்து 4ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் கன்று ஒன்றுக்கு ரூ.7 வீதம் 21 ரூபாய் பராமரிப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு கூறினார். முன்னதாக அரச்சலூரில் அமைக்கப்பட்டுள்ள நாற்று பண்னையை வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி, துணை இயக்குநர் ஆசைத்தம்பி மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். https://www.tnagrisnet.tn.gov.in , https://www.tnforestst.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today