ஈரோடு ஜூன் 5: மத்திய அரசை கண்டித்தும், 3 வேளாண் சட்ட நகல்களை தீ வைத்து எரித்தும் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசு பிறப்பித்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும். விவசாய உற்பத்தி பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். டெல்லியில் போராடி வரும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் தேசிய அளவில் நேற்று போராட்டம் நடந்தது.ஈரோடு மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். சென்னிமலையில் நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் பொன்னையன் தலைமை தாங்கினார். கவுந்தப்பாடியில் விவசாயிகள் சங்க நிர்வாகி முனுசாமி, பெருந்துறையில் மணியன், ஈரோட்டில் இளங்கோ, மொடக்குறிச்சியில் சொங்கப்பன் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றதாக விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கூறினர்.

நிருபர்.
ஈரோடு டுடே