சத்தியமங்கலம் சூலை 2: சத்தியமங்கலம் அருகே அங்கனங்கவுண்டன் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி சௌமியா. நிறைமாத கர்ப்பினியான சௌமியா, கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார்.அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

தாயும், சேயும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து குழந்தையை உடனடியாக மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மிகக்குறைந்த நேரத்தில் உயர் சிகிச்சை கிடைத்தால் சிறந்தது என மருத்துவர்கள் கூறினர்.பிறந்த மூன்று தினங்களே ஆன நிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு சரியாக இல்லாததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கண்ணீருடன் பெற்றோர் இருந்த நிலையில், சத்தியமங்கலம் ரிலீப் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் நவீன் தனது உயிரை பணயம் வைத்து சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு 40 நிமிடங்களில் அதிவிரைவாக ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி, குழந்தையை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தார்.

உரிய நேரத்தில் குழந்தை மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டததால் அங்குள்ள மருத்துவர்கள் விரைவான சிகிச்சை வழங்கினர். தற்போது அக்குழந்தை நன்றாக உள்ளது. இதை அறிந்து வேன் டிரைவரின் விரைவுடன் பாதுகாப்பான டிரைவிங் குறித்து சமூக வலை தளங்களில் பரவி, அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

செய்தி நிருபர் ஈரோடு டுடே