ஈரோடு சூன் 27: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நுண் உரமயமாக்கல் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, ஈரோடு மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 800 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது. இதில் நுண் உரமாக்கல் மையம், வைராபாளையம் என்ற இடத்தில் காவிரி கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் முயற்சியால், கடந்த பல ஆண்டுகளாக காவிரி கரையில் குவித்து வைக்கப்பட்ட பல ஆயிரம் டன் குப்பைகள், மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்கப்பட்டது.பின், மக்காத குப்பையை விற்பனை செய்துவிட்டு, மக்கும் குப்பையை தரமான உரமாக்கி, விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கினர். இப்பணிகளில் தனியார் ஒப்பந்ததாரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் போன்றோர் முழுமையாக ஈடுபட்டு, பழைய குப்பையை அகற்றியதுடன், புதிதாக வரும் குப்பைகளையும் தற்போது உரமாக்கி வருகின்றனர். இதனால், தேசிய அளவில் சிறந்த முறையில் நுண் உரமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியதற்காக, ஈரோடு மாநகராட்சிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் அனைத்து பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே