ஈரோடு சூன் 26: ஈரோடு மாவட்டத்தில் முளைப்பு திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் எஸ்.வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பில் கூறியது, விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், விதை விற்பனையாளர்களை கண்காணிக்கவும், விதை சட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் விதை ஆய்வு பிரிவு செயல்படுகிறது. அரசு துறைகளான வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, கால்நடை துறை, வேளாண்மை பல்கலை கழகம், கால்நடை பல்கலை கழகம், அரசு சார்பு துறைகளான வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வேளாண்மை கூட்டுறவு விற்பனை மையங்கள், விதை விற்பனை உரிமம் பெற்ற விதை விற்பனை செய்யும் தனியார் விற்பனை மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்படுகிறது. உரிமம் பெற்ற விதை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், முளைப்பு திறன் பரிசோதனை முடிவுகள் பெறப்பட்ட பின்னரே விவசாயிகளுக்கு விதைகள் வினியோகம் செய்ய வேண்டும். உண்மை நிலை விதைகளை வினியோகஸ்தர்கள், சில்லரை விற்பனையாளர்களுக்கு அனுப்பும்போது, விதை குவியலுக்கு உரிய பகுப்பாய்வு முடிவு அறிக்கை நகலுடன் அனுப்ப வேண்டும்.பகுப்பாய்வு முடிவு அறிக்கை இல்லாத விதை குவியலில் இருந்து, விதை மாதிரி எடுத்து விதை பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி, பகுப்பாய்வு முடிவு கிடைத்த பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.பகுப்பாய்வு முடிவுகள் விரைவில் தேவைப்படும் பட்சத்தில் முன்னுரிமை முறையில் ஆய்வுக்கு அனுப்பி பெற்று கொள்ள வேண்டும். விபர அட்டையில் 14 விபரங்களுடன் உள்ள உண்மை நிலை விதைகளின் உண்மை நிலை அட்டை சிப்பங்களின் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோர் மீது விதை சட்டம், விதை விதிகள், விதை கட்டுப்பாட்டு ஆணை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே