பவானி ஜூன் 26: கொரோனாவுக்கான தடையை மீறி ஆற்றங்கரை ஓரத்தில் நடந்த பரிகார பூஜைகளால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சிறந்த பரிகாரத் தலங்களில் பவானியும் ஒன்று.  பவானி கூடுதுறை என்ற இடத்தில் பவானி ஆறு, காவிரி ஆறு மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடுகிறது. எனவே இவ்விடத்தை ‘திரிவேணி சங்கமம்’ என்றும், கூடுதுறை என்றும் அழைப்பார்கள். அவ்விடத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பிறப்பு முதல் இறப்பு வரையிலுள்ள அனைத்து தோஷங்களுக்கும் பரிகாரம் செய்யப்படுகிறது. வருடத்தின் எல்லா நாட்களிலும் இத்தலத்துக்கு வந்து ஏராளமானவர்கள் பரிகாரங்கள் செய்வது வருகின்றனர். தற்போது கொரோனா 2ம் அலையின் காரணமாக சங்கமேஸ்வரர் கோவிலில் பரிகார பூஜைகள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தடை உத்தரவை மீறி காவிரி, பவானி ஆற்றங்கரை ஓரங்களில் சில புரோகிதர்கள் பரிகார பூஜைகளை செய்து வருகின்றனர் . ஏற்கெனவே புறநகர் பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்று ஒரே இடத்தில் அதிக அளவு மக்களை வரவழைத்து பரிகார பூஜைகள் நடைபெறுவதால் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்று அரசின் உத்தரவை மீறி செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே