ஈரோடு நவ 24:

ஈரோடு மாவட்ட அனைத்துச் சங்க நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் ஐ.என்.டி.யூ.சி, மாவட்டத் தலைவர் கே.ஆர்.தங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டத் தலைவர் எஸ்.சின்னசாமி, மாநிலக்குழு உறுப்பினர் வ.சித்தையன், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் பி.சண்முகம், எல்.பி.எப். மாவட்டச் செயலாளர் சே.கோபால், துணைச் செயலாளர் ஜி.ரவிச்சந்திரன், எம்.எல்.எப். மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.காளியப்பன், எல்.டி.யூ.சி. செயலாளர் ஏ.கோவிந்தராஜ், டி.டி.எஸ்.எப். சார்பில் எம்.துரைராஜ், டி.கிறிஸ்டோபர் ஆகியோர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மத்திய அரசு நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை குறைத்து, 4 சட்டத் தொகுப்புகளாக்கி உள்ளதைத் கைவிட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தேசிய பணமாக்குதல் திட்டம் உள்ளிட்ட எந்தப் பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது.  பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியைக் குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும்.

வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வீதம் நிவாரணம் வழங்கவேண்டும். கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்கவேண்டும். ஏற்கனவே இயங்குகிற மாநில நலவாரியங்களை சீர்குலைக்கக்கூடாது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.

நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தவேண்டும். விவசாயம், கல்வி, மருத்துவம் மற்றும் அத்தியாவசிய மக்கள் பயன்பாட்டுத் துறைகளில் பொது முதலீட்டை அதிகப்படுத்தவேண்டும். செல்வ வளம் மிக்கவர்களிடம் இருந்து சொத்து வரி வசூலித்து, இதற்கான நிதியைத் திரட்டி தேசிய பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டி புனர் நிர்மாணம் செய் என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி அன்று மாவட்டத் தலை நகர்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென்ற முடிவுக்கிணங்க ஈரோடு, சூரம்பட்டி நால்ரோடு அருகில் அனைத்து சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நடைபெற உள்ள நாடு தழுவிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும். அனைத்து சங்கங்கள் சார்பில் டிசம்பர் 20ம் தேதிக்குள் மாவட்ட மாநாடு நடத்துவது. டிசம்பர் இறுதி வாரத்தில் கோவையில் நடைபெறும் மண்டல மாநாட்டில் திரளாகப் பங்கேற்பது. ஐனவரி மாதத்தில் விரிவான பிரச்சார இயக்கம் நடத்துவது. ஐனவரி 26ம் தேதி அன்று தேசியக்கொடி ஏற்றி தேசத்தை பாதுகாக்க உறுதியேற்பது என்பன உள்ளிட்ட இயக்கங்களை ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது, என தீர்மானம் நிறைவேற்றினர்.  https://www.labour.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/