ஈரோடு அக்.18:

ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யத் தொடங்கி உள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாநகராட்சியில் 4  மண்டலங்களில் உள்ள 60 வார்டுகளில் டெங்கு தடுப்பு குழுவினர் வீடு வீடாக சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டு டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர் சாதனப் பெட்டியில் பின்புறம் தேங்கியுள்ள கழிவுநீர் முறையாக அப்புறப்படுத்தபடுகிறதா? வீடுகளில் மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் நிலத்தடியில் உள்ள குடிநீர் தொட்டி முறையாக மூடப்பட்டுள்ளதா? சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துள்ளனரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வில் அந்தந்த மண்டலத்துக்கு உட்பட்ட உதவி ஆணையாளர்கள், அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மாநகர் பகுதியில் வில்லரசம்பட்டி, புதுமை காலனி, மோசிகீரனார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் உடல் நிலையும் தற்போது சீராக உள்ளது. இவர்கள் வசித்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாநகராட்சி பணியாளர்கள் அந்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

தற்போது மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி பகுதியில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்கும் வகையில் கடந்த சில நாட்களாக வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு வீடாக தடுப்பு குழுவினர் ஆய்வு செய்யும் வகையில் மாநகர் பகுதியில் 250 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வீடு வீடாகச் சென்று வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கும் வகையில் பொருட்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்வார்கள். மட்டும் வீட்டின் மேல்நிலை குடிநீர்  தொட்டி முறையாகப் பராமரிக்கபடுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்வார்கள். அதில் கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தால் முதல் தடவை மட்டும் மறந்து தெளித்து அவர்களுக்கு அறிவுரை கூறி சென்று விடுவார்கள். மீண்டும் அதேபோன்று  கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்தால், அந்த வீட்டுக்காரர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது.

கடந்த வாரத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீரை காய்ச்சி வடிகட்டி பயன்படுத்த வேண்டும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/