ஈரோடு சூன்12: ஈரோடு மாவட்டத்தில் 2,450 எக்டேர் விளை நிலத்தில் சொட்டு நீர் பாசனம் வசதி செய்து கொள்ள மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதுபற்றி, ஈரோடு மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சி.சின்னசாமி செய்தி குறிப்பில் கூறியதாவது:இத்திட்டத்தில் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமாக ஒரு ஏக்கருக்கு 42 ஆயிரத்து 781 ரூபாய், இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை 75 சதவீதம் மானியமும் பெறலாம்.நீர் தேவை அதிகரிப்பதால் சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை துாவுவான் போன்ற பாசன வசதிகள் மூலம் பயிர் செய்யலாம். இதன் மூலம் 70 சதவீத நீரை சேமிக்கலாம். நீரில் கரையும் உரங்களை கொண்டு நுண்ணீர் பாசனம் அமைப்பதால் உரச்செலவு குறையும். பயிரின் வேர்களில் நீர் விழுவதால் தேவையற்ற களைகள் வராமல் தடுப்பதுடன், மண் இறுக்கம் குறைந்து, மண்ணில் காற்றோட்டம் ஏற்படும்.புதிதாக மின் இணைப்பு பெற்று நுண்ணீர் பாசன திட்டத்தின் இணையும் விவசாயிகளுக்கு துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் என்ற திட்டத்தில் மின் மோட்டார் அல்லது டீசல் பம்புசெட், பாசனத்துக்கு நீர் எடுத்து செல்லும் பி.வி.சி., குழாய்கள், தரை நிலை நீர் தேக்க தொட்டிகள் போன்ற பணி செய்ய 50 சதவீத பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.நிலத்தடி நீர் அதிகமாக உள்ள பாதுகாப்பான பகுதியான சிவகிரி, பூந்துறை கோபி, கூகலூர், வாணிப்புத்தூர், பர்கூர், குத்தியாலத்தூர் ஆகிய 7 பிர்காக்களை சார்ந்த விவசாயிகளுக்கு இப்பணிகளுடன் சேர்த்து, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு போன்றவை அமைக்க, 50 சதவீத பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், சம்மந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.
நிருபர்.
ஈரோடு டுடே