பெருந்துறை ஆக 25:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பணிக்கம்பாளையம் கேஸ் குடோன் அருகில் ஒரு வீட்டில் வெளிநாட்டினர் தங்கியிருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற பெருந்துறை போலீசார் அங்கு தங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் முஜாம்மண்டல், இபாதுல் அலி ஆகியோர் என்பதும் இவர்கள் இருவரும் வங்கதேசம் நாட்டில் இருந்து இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்து ரெயில் மூலம் ஈரோடுக்கு வந்து அங்கிருந்து பெருந்துறையில் தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜஹங்கர், ஆதாஸ் ஆகியோரும் தங்கியிருந்தது தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பெருந்துறை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாக இருக்கும் ஜஹங்கர், ஆதாஸ் அவரை பிடிக்க பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தனிப்படையினர் திருப்பூர்-ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டுவரும் பனியன் கம்பெனிகளில் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இதேபோல் கட்டிடங்கள் வேலை நடைபெறும் இடங்களிலும் சென்று சோதனை செய்து வருகின்றனர்.

இருவரும் வேறு எங்கு தப்பிச் செல்லாத வகையில் இருவர் புகைப்படங்களும் அனைத்து காவல் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் இருவர் பிடிபட்டால் தான் பெருந்துறையில் இவர்கள் எதற்காக தங்கியிருந்தார்கள் என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today