ஈரோடு ஆக 9:

இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் ராஜா ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் குறைந்தாலும் இரண்டாம் அலை இன்னும் முழுமையாக முடியவில்லை. ஓரிரு மாதங்களில் மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற மிகப்பெரிய அச்சமும் அதற்கான முன்னேற்பாடுகளும் செய்ய வேண்டிய நிலையில் இருக்கின்றோம். அதற்கு முன்பாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சகஜ நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும், குறிப்பாக தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக எடுத்துக்கொள்ளவேண்டும். தடுப்பூசி செலுத்தும் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். அதை விரைவாக அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் முழு முயற்சி எடுக்க வேண்டும். தற்பொழுது ஓரளவிற்கு தடுப்பூசி கிடைத்தாலும் அது போதுமானதாக இல்லை. இன்னும் சுற்றுலா தளங்கள் பண்டிகை கால வழிபாட்டு தளங்கள் இவற்றை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். மக்கள் அதிகம் கூடும் சந்தைகள் சமூக இடைவெளி யோடு கடைபிடித்தால் தான், இரண்டாவது அலையில் சிக்கித் தவித்தது போல் மூன்றாவது அலையில் இருந்து தப்பிக்க முடியும்.

மூன்றாவது அலை குழந்தைகளையும் பாதிக்கும் என வல்லுநர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கும் தடுப்பூசியை அரசு வழங்க வேண்டும் விழிப்புணர்வு முகாம்கள் அரசு நடத்தி வருகிறது அது வரவேற்கத்தக்கது. இந்திய மருத்துவச் சங்கமும் அரசோடு இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் குழப்பம் நிலவுகிறது. 25 சதவீதம் தனியார் மருத்துவமனைகளுக்கு தருவதாகச் சொன்னார்கள். பின்னர் 10 சதவீதம் தருவதாகச் சொன்னார்கள். இதில் குழப்பம் நிலவி வருகிறது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். இதற்கான வழிகாட்டு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் வாங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

ஈரோடு போன்ற மாவட்டங்களில் இம்யூனிட்டி குறைவாக இருக்கிறது. கிராம மக்களிடம் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அவர்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். இன்னும் அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அனைவரும் தடுப்பூசி செலுத்தி ஹெர்டு இம்யூனிட்டி கூடினால் மட்டுமே கொரனோவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். மூன்றாம் அலைக்கு மருத்துவர்களை ஐஎம்ஏ மூலம் தயார்படுத்தி அறிவுரைகளை வழங்கி வருகிறோம். நாடு முழுவதும் இரண்டு அலைகளிலும்1500 மருத்துவர்கள் இறந்துள்ளனர். தமிழகத்தில் 110 பேர் இறந்தனர். அனைவரின் குடும்பத்தினருக்கும் அரசு அறிவித்த 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today