ஈரோடு டிச 27:

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில் அவ்வப்போது உருமாற்றம் அடைந்து பீதியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை தொற்று சாதாரண தொற்றை விட வேகமாக பரவக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர். தற்போது இந்த வகை தொற்று உலகில் 90 நாடுகளுக்கு மேல் பரவி உள்ளது. இந்தியாவில் இதன் பாதிப்பு 300- ஐ கடந்துள்ளது . தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதன் பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திலும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதையடுத்து மாஸ்க் அணிதல், தனிநபர் இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயனாளிகள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தியும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் வருகின்றனர். இதன்படி பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இதுவரை 280 பேர் ஈரோட்டுக்கு வந்துள்ளனர்.

கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் 134 பேருக்கு 14 நாட்கள் தனிமை முடிந்ததால் அவர்களுக்கு மட்டும் இரண்டாவது கட்டமாக சுகாதாரத் துறையினர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதில் அவர்கள் அனைவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து இவர்கள் அனைவரும் வழக்கம் போல் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 146 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். அவர்களுக்கு 14 நாட்களுக்கு பிறகு இரண்டாவது கட்ட கொரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today