ஈரோடு நவ 2:

19 மாதங்களுக்கு பிறகு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவர்களை வரவேற்றனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. கொரோனா பரவல் மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டுள்ளதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் செப்டம்பர் மாதம் திறக்கப்பட்ட நிலையில், தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நேற்று தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான 1306 அரசு மற்றும் தனியார் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நேற்று தொடங்கப்பட்டது. 2 லட்சத்து 19 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வந்தனர். 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்களை பூங்கொத்து மற்றும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகள், பென்சில் மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பள்ளிகளுக்கு வந்த மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏதாவது உள்ளதா என்பதை கண்காணிக்கும் வகையில் தெர்மல் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மாஸ்க் இல்லாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மாஸ்க் வழங்கினர். ஒரு வகுப்பறைகள் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கூடுதல் மாணவர்களை ஆடிட்டோரியம் உள்ளிட்ட பகுதிகளில் அமரவைக்கப்பட்டனர். முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் பாடப்புத்தகங்கள் வழங்காத மாணவர்களுக்கு 2ம் பருவத்திற்கான புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கினர். புதியதாக திறக்கப்பட்ட பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். https://www.tnhealth.tn.gov.in, https://www.tnschool.gov.in  

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/