சத்தியமங்கலம் ஆக 21:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 125 க்கும் மேற்பட்ட வகையான பட்டாம் பூச்சிகள் உள்ளதாக பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தாளவாடி அடுத்துள்ள தலமலை வனப்பகுதியில் வனத்துறை மற்றும் அகஸ்திய தற்காப்பு கலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து மரம் நடும்விழா மற்றும் பொதுமக்களுக்கு வனங்கள் குறித்து சிலம்பம் நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்சிக்கு அகஸ்திய தற்காப்பு கலை நிறுவனர் குணசேகரன் வரவேற்புரையாற்றினார். தலமலை வனச்சரகர் சுரேஷ் தலைமை தாங்கினார். வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் நந்தகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பறவைகள் ஆராய்ச்சியாளர் ரவிக்குமார் பேசியதாவது,சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 125 க்கும் மேற்பட்ட வகையான வண்ணத்து பூச்சிகள் உள்ளன.
இவை தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு பெரும் உதவி செய்கிறது. இதனால் செடிகள், மரங்கள், கொடிகள் வளர்ந்து காடு செழிக்கிறது. யானைகள் இடம் பெயர்வு காரணமாக காடுகள் செழித்து வருகின்றன. ஏனெனில் யானைகளின் சாணத்தில் 300க்கும் மேற்பட்ட விதைகள் காணப்படுகின்றன. சாணத்தில் உள்ள விதைகள் மழைக்காலங்களில் வளர்ந்து காடுகள் செழிக்கின்றது.
பறவைகளின் எச்சம் பல லட்சக்கணக்கான மரங்கள் உற்பத்தியாக காரணமாக அமைகின்றது. வனத்தை பாதுகாப்பதில், சிறு பூச்சியில் இருந்து பெரும் விலங்குகள் வரை பங்கு வகிக்கின்றது. எனவே வனத்தை பாதுகாக்க மனிதர்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://erode.today