ஈரோடு சூலை 24:

ஈரோடு மண்டலத்தை சேர்ந்த அரசு டவுன் பஸ்களில் கடந்த 10  நாட்களில் மட்டும் 11 லட்சம் பேர் இலவசமாக பயணம் செய்துள்னர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் 5 முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார். இவற்றில் மிக முக்கியமானது அரசு நகர பஸ்களில் பெண்கள் கட்டணம் இல்லாமல் இலவசமாக பயணம் செய்வது. இந்த நடைமுறை கடந்த மே மாதம் 8ம் தேதி அமுலுக்கு வந்தது. கொரோனா தாக்கம் காரணமாக மே மாதம் 10-ம் தேதி முதல் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கடந்த மே மாதம் 8 மற்றும் 9-ம் தேதிகளில் மட்டுமே நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்தனர். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்ககைகள் தாங்களும் நகர பஸ்களில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையையும் தமிழக முதல் -அமைச்சர் ஏற்றுக்கொண்டு, பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் செல்லும் ஒரு உதவியாளர் ஆகியோர் டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்தார். கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த 5-ம் தேதி முதல் அரசு பஸ் இயக்கி வருகிறது. அன்று முதல் டவுன் பஸ்களில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இலவச பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் டவுன் பஸ்களில் தினந்தோறும் எத்தனை பேர் இலவசமாக பயணம் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள கடந்த 12-ம் தேதி முதல் தனித்தனியாக டிக்கெட்டுகள் வழங்கப்படன. அதன்படி ஈரோடு மண்டலத்தில் உள்ள 13 கிளைகளில் இயங்கும், 207 அரசு டவுன் பஸ்களில் கடந்த 12ம் தேதி மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 415 பெண்களும், 80 திருநங்கைகளும், 513 மாற்றுத்திறனாளிகளும், இவர்களுக்கு உதவியாக 40 பேரும் என மொத்தம் 1 லட்சத்து, 4 ஆயிரத்து, 48 பேர் இலவசமாக பயணித்தனர். இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அதாவது கடந்த 10 நாட்களில் மட்டும் 10 லட்சத்து 84 ஆயிரத்து 574 பெண்களும், 5 ஆயிரத்து 877 மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு உதவியாக 698 பேரும், திருநங்கைகள் 896 பேரும் என மொத்தம் 10 லட்சத்து 92 ஆயிரத்து 45 பேர் அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்துள்ளனர் என்றும், இது மொத்த பயணிகளில் 59 சதவீதம் என்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today