ஈரோடு நவ 15:

டெங்கு கொசு ஒழிப்பு பணியில் மஸ்தூர் பணியாளர்கள் 1000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்து கொண்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தீவிர டெங்கு பரவல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டெங்கு கொசுக்கள் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீர் மூலம் உற்பத்தியாவதால் மழைநீர் தேங்காத வகையில், வீடு வீடாக சென்று மஸ்தூர் பணியாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இப்பணியில் மாவட்டம் முழுவதும் 1000 மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஈரோடு மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் கூறியதாவது, ஈரோடு மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 1000 கொசு ஒழிப்பு மஸ்தூர் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று மழை நீர் தேங்கி உள்ளதா என்பது குறித்தும், தேங்காய் தொட்டிகள், டயர்கள் மற்றும் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதை அகற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. காய்ச்சல் அறிகுறிகள் ஏதாவது இருந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று மக்கள் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இவ்வாறு சோமசுந்தரம் கூறினார். https://www.tnhealth.tn.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/