100 நாள் வேலை திட்ட பணியாளர்களிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த எதிர்ப்பு ஈரோடு சூன் 21: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சண்முகவள்ளி மற்றும் பல்வேறு அமைப்பினர் சேர்ந்து மனு வழங்கி கூறியதாவது: மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபடுவோரின் ஜாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. வரும் காலங்களில் கூலி செலவினங்களை, எஸ்.சி., எஸ்.டி., இதரர் என்ற ரீதியில் கணக்கு பிரித்து மத்திய, மாநில அரசுகள் பராமரிக்கும். முழு அளவில் ஜாதி ரீதியான கணக்கெடுப்பு முடிந்ததும், தனித்தனியாக உழைப்பாளர் பட்டியல் தயாரித்து, தனித்தனி நிதி ஒதுக்கப்படும். ஒரே வேலை; ஒரே ஊதியம் என்ற உரிமை இதன் மூலம் பறிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு ஒரு வேலை, மற்றவர்களுக்கு ஒரு வேலை, கூலி என்ற ரீதியில் பிரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அவ்வாறான கணக்கெடுப்பு நடத்தக்கூடாது.இத்திட்டத்தில் 100 நாள் வேலை வழங்குவதை மாற்றி 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும். தினசரி கூலியாக 600 ரூபாய் என வழங்க வேண்டும். இப்பணிக்கான கூலியை உரிய நேரத்தில் வழங்க வேண்டும், என வலியுறுத்தினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே