ஈரோடு சூலை 13 :

ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள 207 டவுன் பஸ்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் மகளிர் இலவசமாக பயணித்துள்ளனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் வேலைக்கு செல்லும் மகளிர்கள் மற்றும் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் ஆகியோர் டவுன் பஸ்களில் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக பயணிக்கலாம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்தினால் டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக பவானி, சித்தோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி, சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஈரோட்டிற்கு வரும் டவுன் பஸ்களில் காலை, மாலை நேரங்களில் மகளிர் கூட்டம் அதிகரித்துள்ளது.

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் அரசு பஸ்களில் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கு இலவசமாக பயணம் செய்வதற்கான அடையாளமாக பஸ்களில் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது.

நேற்று முன்தினம் முதல் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஈரோடு மண்டலத்தில் 13 கிளைகள் உள்ளன. நேற்று முன்தினம் மட்டும் 207 டவுன் பஸ்களில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 415 மகளிர்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.

திருநங்கைகள் 80 பேரும், மாற்றுத்திறனாளிகள் 513, மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்கள் 40 பேர் என மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 48 பேர் இலவசமாக பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே
https://www:erode.today