ஈரோடு சூன் 20: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவுக்கான ஊரடங்கு காலத்தில் சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை மாறவில்லை. அதுபோல, 5 மாநில சட்டசபை தேர்தல் வரை பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை. தேர்தலுக்குப்பின், தற்போதைய கொரோனா ஊரடங்கு நிலையிலும் இவற்றின் விலை தொடர்ந்து உயர்கிறது.இந்தியாவில் பல்வேறு  மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100ஐ தாண்டி விற்கிறது.தமிழகத்தில் முதல் முறையாக கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர்.ஈரோடு மாவட்டத்திலும் தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக உள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.71க்கு விற்பனையானது. ஆனால் இன்று 26 பைசா அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.97-க்கு விற்பனை செய்யப்பட்டது.இதேபோல் ஒரு லிட்டர் டீசல் நேற்று ரூ.92.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 26 பைசா அதிகரித்து ரூ.93.16-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை அதிகரிப்பை அறியும் வாகன ஓட்டிகள் விரக்தி அடைகின்றனர். 

செய்தி நிருபர் ஈரோடு டுடே