ஈரோடு சூன் 18: சித்தோட்டில் ரூ.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இணைப்பு சாலையை, அங்கு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை அழைத்து அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.ஈரோடு அடுத்த சித்தோடு பகுதியில் கோவையில் இருந்து சேலம் செல்லும் நான்கு வழிச்சாலையும், ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பிரதான சாலையும் உள்ளது. இவ்விரு சாலைக்குமான இணைப்பு சாலை முறையாக இல்லாததால், சாலைகளை கடந்து மக்கள் செல்வார்கள். இதனால் 45 விபத்துகள் நடந்துள்ளது.எனவே அப்பகுதியில் இணைப்பு சாலை தேவை என, 15 ஆண்டாக கோரினர். ரூ.40 லட்சம் செலவில் சித்தோட்டில் இணைப்பு சாலை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டது. தொடங்கி 4 நாட்களில் இந்த பணிகள் நிறைவடைந்து நேற்று திறப்பு விழா நடந்தது.ஈரோடு கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரிப்பன் வெட்டி சாலையை திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், அவர், இப்பகுதியில் விபத்தில் இறந்த தங்கராஜ், சபரி ஆகியோரின் நினைவாக அவர்களின் குடும்பத்தை சேர்ந்த பானுப்பிரியா, காவியா ஆகியோரை வைத்து ரிப்பன் வெட்டி சாலையை திறக்க வைத்து கவுரவித்தார்.பின்னர் சாலையில் 2 பக்கமும் மரக்கன்றுகளை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், ஆர்.டி.ஓ. பிரேமலதா ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர்.கோபி கோட்ட நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளர் குப்புசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த இணைப்பு சாலை திறக்கப்பட்டதை தொடர்ந்து பேரோட்டில் இருந்து நேரடியாக சித்தோடு செல்லும் ரோடு அடைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பாலம் வழியாக சாலையை கடக்க வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. சாலைகளில் பயணிக்கும் போது பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே