ஈரோடு சூன் 11: முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் மூலம் கொரானா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.முதல் தவணையாக கடந்த மே மாதம் 15 ம் தேதி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. அப்போது இத்தொகை பெறாதவர்களுக்கான தொகை அந்தந்த ரேஷன் கடைகளில் இருப்பில் வைத்துள்ளனர்.இதற்கிடையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 3ம் தேதி இரண்டாம் தவணை தொகையாக ரூ.2 ஆயிரம் மற்றும் உப்பு, கோதுமை மாவு, ரவை, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, சர்க்கரை உட்பட 14 வகையான பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 1,152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் கொரானா நிவாரணம் இரண்டாம் தவணை தொகையான ரூ.2 ஆயிரம் வழங்க ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்காக நேற்று முதல் ரேஷன் கடைக்காரர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி வருகின்றனர். இப்பணி வரும் 14ம் தேதி வரை நடத்தப்பட்டு, 15ம் தேதி முதல் மளிகை பொருள் தொகுப்பும், ரூ.2 ஆயிரம் ரொக்கப்பணமும் வழங்க உள்ளனர்.ரேஷன் கடையில் அதிக கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தினமும் 200 பேருக்கு மட்டும் இவை வழங்கும் வகையில் டோக்கன் வழங்கி உள்ளனர். இவ்வாறு வரும் 22ம் தேதி வரை இப்பொருள் வழங்கிவிட்டு, 23ம் தேதி முதல் வழக்கமான ரேஷன் பொருட்கள் வழங்க உள்ளனர்.

நிருபர்.
ஈரோடு டுடே