ஈரோடு சூன்21: ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் ரங்கம்பாளையத்தில் சி.பி.எஸ்.சி., பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் தனியார் பள்ளி உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.கடந்தாண்டு முதல் கொரோனா ஊரடங்கால் ஆன்லைனில் வகுப்புகள் நடக்கிறது. கடந்தாண்டு துவக்கத்தில் 50 சதவீத கட்டணத்தை செலுத்த பள்ளி நிர்வாகம் கூறியதால், அனைத்து பெற்றோர்களும் செலுத்தினர். பள்ளி கட்டணம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பள்ளிக்கு மாணவ, மாணவியர் செல்லாமல், ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்படுவதாலும், கொரோனா ஊரடங்கு நிலையை கருத்தில் கொண்டு, 75 சதவீத கட்டணம் பெற உத்தரவிட்டது.தற்போது கடந்த கல்வியாண்டு முடிந்து அடுத்த கல்வி ஆண்டு துவங்கி உள்ளது. தற்போது பள்ளி நிர்வாகம் சார்பில் தொடர்பு கொண்டு மேலும் 50 சதவீத கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே மாணவர் தேர்ச்சி பெற்றமைக்கான சான்று வழங்கி, அடுத்த வகுப்புக்கான ஆன்லைன் வகுப்பை தொடர முடியும் என மிரட்டுகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி, 75 சதவீத தொகை என்ற ரீதியில் பாக்கி உள்ள 25 சதவீத தொகையை மட்டும் செலுத்த முன்வரும் பெற்றோரை, முழு தொகை கட்ட வலியுறுத்துகின்றனர்.இதுபற்றி, நடவடிக்கை எடுத்து, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு அடுத்த ஆண்டுக்கான கல்வி பயில ஆன்லைன் வகுப்பில் அனுமதிக்க வேண்டும், என வலியுறுத்தி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர்கள் மனு வழங்கினர்.மனுவை பெற்ற கலெக்டரின் நேர்முக உதவியாளர் – பொது – பாலாஜி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே