ஈரோடு மே 28: ஈரோடு – திண்டலில் உள்ள லிட்டில் சிஸ்டர்ஸ் என்ற கிறிஸ்தவ முதியோர் இல்லத்தில், அருட்சகோதரிகள் முதியோர்களை கவனித்து வருகின்றனர். இங்கு 75 வயதுக்கு மேற்பட்ட 100 பேர் வசிக்கின்றனர்.இங்கு, பத்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டனர். இங்குள்ளவர்களுக்கு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மற்றும் உணர்வுகள் அமைப்பு நிறுவனரான மக்கள்ராஜன் தலைமையிலானவர்கள், தினமும் உணவு வழங்கி வந்தனர்.நேற்று முன்தினம் காலை உணவு வழங்க சென்றபோது, கொரோனா பாதித்த, 75 வயதுடைய ஆண்டாள் என்ற மூதாட்டி இறந்து இறந்தார். அவரது உடலை எரியூட்ட வேண்டும் என, அருட்சகோதரிகள் கோரினர்.இறந்த ஆண்டாள் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது மதச்சடங்குடன் உடலை எரியூட்ட முடிவு செய்தனர். அந்த இல்லத்தில் பெண்கள் மட்டுமே உள்ளதாலும், ஆண்டாளுக்கு உறவினர்கள் இல்லை என்பதாலும் சிரமப்பட்டனர்.உணர்வுகள் அமைப்பினர், மக்கள்ராஜன் உதவியுடன், மூதாட்டிக்கு இந்து மதப்படி இறுதி சடங்குகள் செய்தனர். மாநகராட்சி மூலம், அந்த உடலை எரியூட்ட அனுமதி மற்றும் சலுகைகள் வழங்கினர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த பாட்ஷா, எஸ்.டி.பி.ஐ., கட்சி மாவட்ட தலைவர் லுக்மான் ஆகியோர், இதுபோன்ற கொரோனாவால் இறந்த, 120 உடலுக்கு அவர்களது மதமுறைப்படி இறுதிச்சடங்குகளை செய்துள்ளனர். எனவே, அவர்கள் உதவியுடன், ஆண்டாளின் உடல், ஆத்மா மயானத்துக்கு எடுத்து சென்று எரியூட்டினர்.இதுபற்றி மக்கள்ராஜன் கூறுகையில், ‘இந்து மதத்தை சேர்ந்த ஆண்டாள் என்ற மூதாட்டியை, இறுதிக்காலம் வரை கிறிஸ்தவ சகோதரிகள் பராமரித்தனர். அவரது இறுதி நிகழ்வுகள், சடங்குகளை முஸ்லீம் சகோதரர்கள் செய்தனர். பிற ஏற்பாடுகளை நாங்கள் செய்து, மனித நேயத்துடன், அவருக்கு இறுதி மரியாதை செய்துள்ளோம்,’’ என்றனர்.
நிருபர்.
ஈரோடு டுடே