முதல்வர் வருகைக்காக அரசு மருத்துவ கல்லுாரியில் ஆய்வு
பெருந்துறை மே 29:-ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் கொரானா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளதால், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரியை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய்தார்.தமிழகத்தில் கொரோனா தடப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும், சென்னை, கோவை, ஈரோடு போன்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக காணப்படுகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடத்தவும், தடுப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்யவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 29 இரவு ஈரோடு வருகிறார். இன்று இரவு 8.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, அங்கிருந்து கார் மூலம், ஈரோடு வந்து, காலிங்கராயன் ஆய்வு மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.மே, 30 காலை 10 மணிக்கு, ஈரோட்டில் இருந்து கார் மூலம், பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள, 300 படுக்கையுடன் கூடிய வளாகத்தை ஆய்வு செய்கிறார். பின், பெருந்துறை பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்கிறார். அங்கிருந்து திருப்பூர் சென்று ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.அன்று மதியம், கோவைக்கு சென்று, சி.எஸ்.ஐ., மருத்துவமனையை ஆய்வு செய்து, கோவை கலெக்டர் அலுவலகத்தில் மாலை, 4 மணிக்கு கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கிறார். பின், செய்தியாளர்களை சந்திக்கிறார். அன்று இரவே, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.