ஈரோடு சூன் 13: தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு நீடிக்கிறது.ஈரோடு உட்பட பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் வரும், 21 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்துள்ளனர். இருப்பினும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி தனியாக செயல்படும் மீன் கடைகள், இறைச்சி கடைகளில் காலை முதல் மாலை வரை வியாபாரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மீன் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.இதனால் ஈரோடு மாநகரில் உள்ள ஸ்டோனி பிரிட்ஜ், கருங்கல் பாளையம் மீன் மார்க்கெட் செயல்படவில்லை. தனிக் கடைகள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் வட்டங்கள் போடப்பட்டு மக்கள் வரிசையில் நின்று வாங்கி வந்தனர். இறைச்சி பார்சலில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே மீன் கடைகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து வரிசையில் நின்று தங்களுக்கு வேண்டிய இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். வழக்கத்தைவிட இன்று இறைச்சி விற்பனை அதிகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோபி, பவானி, அந்தியூர், பெருந்துறை, சத்தியமங்கலம் என மாவட்டம் முழுவதும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.
நிருபர்.
ஈரோடு டுடே