ஈரோடு ஜூன் 10: தமிழகத்தை ஒட்டிய கர்நாடகா – கேரளா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. மாவோயிஸ்டுகள் அடிக்கடி வனப்பகுதியை ஒட்டிய போலீஸ் நிலையங்களில் திடீரென தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம்.வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் அரிசி, உணவு பொருட்களை பெற்று வருவதும் தொடர்கிறது. இதனால் நக்சல் பிரிவு போலீசார் வனத்துறையினருடன் இணைந்து கண்காணிக்கின்றனர்.கொரோனா ஊரடங்கால் வனப்பகுதியிலும், பிற இடங்களிலும் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதை பயன்படுத்தி மாவோயிஸ்டுகள் சதி வேலையில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.இதனால் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வன துறையுடன் இணைந்து வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழக – கர்நாடக எல்லை பகுதி சோதனை சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.தவிர ஈரோடு மாவட்டத்தில் கர்நாடகா எல்லையை ஒட்டிய பர்கூர், வெள்ளிதிருப்பூர், பங்களாபுதூர் பவானிசாகர், ஆசனூர், கடம்பூர், கேர்மாளம், தாளவாடி உள்பட 10 போலீஸ் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலா நான்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டுள்ளனர்.தாளவாடி சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தகவல்களை சேகரிக்கின்றனர். அத்துடன் வாகன தணிக்கையில் பிற நபர்கள் நடமாட்டங்களையும் கண்காணிக்கின்றனர்.

நிருபர்.
ஈரோடு டுடே