ஈரோடு அக் 1:

மாவட்டத்தில் இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்ததால் ஓடைகள், சாலைகளில் மழைநீர் ஆங்காங்கே பெருக்கெடுத்து ஓடியது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஈரோடு, பவானி உள்ளிட்ட சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே மழை பெய்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலம் தொடங்குவதையொட்டி கடந்த ஒரு மாதகாலமாக அனைத்து வார்டுகளிலும் உள்ள சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று வந்தது. ஆனாலும் தூர்வாரப்பட்ட பகுதிகளில் நேற்றிரவு பெய்த மழையால் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. ஈரோடு கருங்கல்பாளையம் கற்பகம் லேஅவுட் முதலாவது வீதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதே போல பவானிசாலையில் ஆர்என்புதூர், அக்ரஹாரம், மாயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து சென்றது. பிச்சைக்காரன் ஓடை, பெரும்பள்ளம் ஓடை, சுண்ணாம்பு ஓடை உள்ளிட்ட ஓடைகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து சென்றது.

பவானி ஆற்றில் வரும் மழைநீர் மற்றும் ஆங்காங்கே உள்ள ஓடைகளில் வரும் மழை நீரும் காவிரியில் கலந்து வருவதால் கருங்கல்பாளையத்தில் உள்ள ஈரோடு நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் பழைய பாலத்தை தண்ணீர் தொட்டபடி சென்றது.மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழையளவு விபரம், ஈரோடு 100 மில்லிமீட்டர், பெருந்தறை 64, கோபி 41.4, தாளவாடி 18, பவானி 103.6, கொடுமுடி 98.2, நம்பியூர் 36, சென்னிமலை 11, மொடக்குறிச்சி 54, கவுந்தப்பாடி 144.2, எலந்தை குட்டைமேடு 49.4, அம்மாபேட்டை 30, கொடிவேரி 32.2, குண்டேரிப்பள்ளம் 51.6, வரட்டுப்பள்ளம் 61.2 மில்லிமீட்டர் ஆகும். மாவட்டத்தின் சராசரி மழையளவு 57.42 மில்லிமீட்டர் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.01 அடியாகவும், அணைக்கான நீர் வரத்து 6644 கன அடியாகவும் இருந்தது. மழையின் காரணமாக பவானி ஆற்றில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2200 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. https://www.imdchennai.gov.in

நிருபர் ஈரோடு டுடே
https://www.erode.today/