ஈரோடு, மே 30: -ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமானதால், தளர்வு இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.அதேநேரம் பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறி, மளிகை பொருட்கள் கிடைக்க மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், வேளாண் வணிகத்துறை மூலம், தள்ளுவண்டி, வேன், லாரிகள் மூலம் அனுமதி பெற்று விற்பனை நடக்கிறது. மாவட்ட அளவில் கடந்த 22ம் தேதி முதல் 1,000க்கும் மேற்பட்ட தள்ளுவண்டி, வேன், லாரிகள், காய்கறி, மளிகை, பழங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன.தற்போது மேலும் ஒரு வாரத்துக்கு என ஜூன், 7 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, டீத்துாள், வெல்லம், சர்க்கரை போன்ற அதிகமாக பயன்படும் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது.வழக்கமாக மாதத்தின் முதல் வாரம் இவற்றை கொள்முதல் செய்வார்கள். ஆனால், முதல் வாரம் ஊரடங்காக நீடிப்பதாலும், மேலும் சில நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்படும் என்ற தகவல்கள் பரவுவதாலும், மக்கள் சிரமப்படுகின்றனர். தவிர, மொத்தமாக மளிகை பொருட்களை வாங்கும் வசதியை ஏற்படுத்த வலியுறுத்துகின்றனர்.இதன்படி, ஈரோடு மாநகராட்சி சார்பில் tnurbantree.tn.gov.in/erode/ என்ற இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரிக்கு சென்று லிங்கை ‘கிளிக்’ செய்தால், அதில் மளிகை கடைகளில் பெயர்கள், மளிகை கடைக்காரர்களின் பெயர்கள், அவர்களது செல்போன் எண்கள், மளிகை கடை முகவரிகள், அவர்களின் இ–மெயில் ஐ.டி.,கள் தெளிவாக கொடுக்கப்பட்டிருக்கும்.அதனை பயன்படுத்தி தங்கள் பகுதி மளிகை கடை எண்ணில் ஆர்டரின் பெயரில் கொடுக்கலாம். அவர்கள் ஆர்டரை பெற்றுக்கொண்டு வீடுகளில் டோர் டெலிவரி மூலம் மளிகை பொருட்களை விநியோகம் செய்வார்கள். இந்த இணையதள வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.

நிருபர்.
ஈரோடு டுடே