ஈரோடு ஜூன் 20: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் பர்கூர் மலைப்பகுதி கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களில் சாமை உள்ளிட்ட பயறு வகை பயிர் சாகுபடி அதிக பரப்பில் பயிரிட்டுள்ளதுடன் அதிக விளைச்சலால் விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பர்கூர் மலையில் கொங்காடை, அக்னிபாவி, மடம், சுண்டைப்போடு, தேவர்மலை, தாமரைக்கரை போன்ற மலை கிராமங்கள் உள்ளன. இங்கு மானாவாரியில் பயறு வகை பயிர்கள் அதிகமாக சாகுபடியாகிறது.இங்குள்ள மானாவாரி நிலங்களில் சாமை, தினை, ராகி, வரகு, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்கள், உளுந்து, பாசிப்பயிறு, தட்டை பயிறு, உருளை, சேனை, சேப்பங்கிழங்கு, முட்டைகோஸ், இஞ்சி போன்றவை அதிகம் பயிரிடப்படும். பருவ மழையை மட்டுமே நம்பி இங்குள்ளவர்கள் பயிர் சாகுபடி செய்கின்றனர். இந்தாண்டு கோடை காலத்திலும் ஓரளவு மழை பெய்ததால், பயறு வகை பயிர்கள் மற்றும் சிறுதானியங்கள் அதிகம் சாகுபடி செய்துள்ளனர். அதிலும் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்ததால் அனைத்து வகை பயிர்களும் செழித்துள்ளன.இதுபற்றி கொங்காடை கிராம மக்கள் கூறியதாவது: கொங்காடை மலை கிராமத்தில் இந்தாண்டு உளுந்து, பாசி பயறு, தட்டை பயிறு போன்றவை அதிகமாக பயிரிட்டுள்ளனர். விதைப்பு மற்றும் விதைப்புக்குப்பின் கோடை மழை பரவலாக பெய்தது. இந்தாண்டு பூச்சி தாக்குதல், நோய், இயற்கை தாக்கம் இல்லை. வன விலங்குகள் பயிர்களை சேதப்படுத்தும். இதுபோன்ற எந்த பாதிப்பும் இல்லாததால் சிறப்பாக பயிர்கள் உள்ளன. பயிர் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால், சாமை, கம்பு உள்ளிட்ட பயிர்கள் நன்கு கதிர் பிடித்துள்ளன. சீதோஷ்ண நிலை சீராக உள்ளதால், இந்தாண்டு நல்ல விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்தாண்டுகளை காட்டிலும் நான்கில் ஒரு பங்கு மகசூல் கூடுதலாக கிடைக்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு கூறினர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே