பெருந்துறை ஜூன் 1: பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த, 650 ஆக்சிஜன் படுக்கை வசதியை, கொரானா நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.ஈரோடு, கரூர், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த கொரானா நோயாளிகள் அதிகமாக இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். இதனால், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கை மற்றும் சாதாரண படுக்கை வசதியை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.தற்காலிகமாக பாதுகாப்பான கொட்டகை அமைத்து, 300 ஆக்சிஜன் படுக்கைள் தயார் செய்து, முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. அதன் அருகே, ஒளிரும் ஈரோடு அமைப்பு சார்பில், 200 படுக்கைகள் கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது.ரோட்டரி சங்கம் சார்பில், 7 கோடி ரூபாயில், 401 படுக்கைகள் கொண்ட மற்றொரு பிரமாண்ட கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிகளை நேற்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் சி.கதிரவன் ஆகியோர் பார்வையிட்டனர்.இம்மாத இறுதிக்குள் இப்பணிகளை நிறைவு செய்து, நோயாளிகள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், நோயாளிகளுக்கு இடம் இல்லை, ஆக்சிஜன் படுக்கை இல்லை என்ற நிலை மாறி, அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை கிடைக்கும். அதற்கேற்ப விரைவாக பணிகளை நிறைவு செய்ய, அமைச்சர் சு.முத்துசாமி யோசனை தெரிவித்தார்.

நிருபர்.
ஈரோடு டுடே