ஈரோடு சூன் 11: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாரத்தில் மரவள்ளி பயிர் 690 எக்டேரில் பயிரிட்டுள்ளனர். மாவுப்பூசி என்ற சாறு உறிஞ்சும் பூச்சிகள், இப்பயிரின் குருத்துக்கு கீழ் இருந்து சாறு உறிஞ்சி, பயிர்களை வளரவிடாது. கோடையில் இப்பூச்சி அதிகமாக தாக்கும்.மரவள்ளியின் இளம் தளிர், தண்டு, மற்ற இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். சாற்றை உறிஞ்சும்போது மரவள்ளியில் நச்சு பொருளை உட்செலுத்தும். நுனிக்குருத்துகள் உருமாறியும், வளர்ச்சி குன்றி காணப்படும். நுனி இலைகள் ஒன்றாக இணைந்து, முடி கொத்து போல தோற்றமளிக்கும். இடைக்கணுக்கள் நீளம் குறைந்து, தண்டுகள் சிதைவடையும்.இத்தாக்குதல் மத்திமமாக இருந்தால் 3 சதவீத வேப்ப எண்ணெய், ஒரு லிட்டர் நீருக்கு 25 மி.லிட்டர் அல்லது மீன் எண்ணெய் சோப்பு ஒரு லிட்டர் நீருக்கு 40 கிராம் கலந்து இலைகள் முழுவதும் நனையும்படி ஏழு நாள் இடைவெளியில் தெளிக்கலாம். தாக்குதல் அதிகமாக இருந்தால், மூன்றாம் வாரம் ரசாயன பூச்சி கொல்லியான ‘தியோமெத்தாக்சோம்’ ஒரு லிட்டர் நீருக்கு, இரண்டு மி.லிட்டர் கலந்து இலைகள் நனையும்படி தெளிக்க வேண்டும்.இவற்றை தெளிக்கும்போது, 50 கிராம் காய்கறி நுண்ணுாட்டம் சேர்க்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு நான்கு கிராம் ‘வெர்டிசிலியம் லக்கானி’ என்ற உயிரக பூஞ்சானத்தை தெளிப்பதால், மாவுப்பூச்சியின் மீது நோய் உருவாகி அதனை இறக்க செய்யும். மாவுப்பூச்சி தாக்கிய இலைகள், செடியின் கீழ் பாகத்தில் உள்ள இலைகளை ஓடித்துவிட வேண்டும்.பொதுவாக 33 சதம் ஸ்டார்ச் உள்ள மரங்களில் உள்ள விதை கரணைகளை பயன்படுத்த வேண்டும். சாய்வு முறையில் நடவு செய்தால், இப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். முசுக்கொட்டை செடிகள் (மல்பெரி செடி), நெய்வேலி காட்டாமணக்கு செடியை வரப்பு ஓரங்களில் பயிர் செய்து, இத்தாக்குதலை குறைக்கலாம்.இத்தகவலை மொடக்குறிச்சி தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆர்.யுவசெந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே