பெருந்துறை சூன் 11: ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்காக மத்திய அரசை கண்டித்து 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பெருந்துறை மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில் பெட்ரோல் பங்க் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் உயராத நிலையில், மத்திய அரசு வரிகளை விதித்து விலையை உயர்த்துகிறது. இதனால், பெட்ரோல், டீசல் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படும் அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. சாதாரண மக்கள் டூவீலர்களைக்கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை நிர்ணயத்தை மத்திய அரசே வைத்திருக்க வேண்டும். பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை நிர்ணயிப்பதால், இதுபோன்ற விலை உயர்வு ஏற்படுகிறது. தவிர புதிய வரி விதிக்காமல், விலை உயர்வை தடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.இதுபோன்று மொடக்குறிச்சியில் வட்டார தலைவர் முத்து குமார் தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ., ஆர்.எம்.பழனிசாமி பேசினார்.கொடுமுடியில் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பெட்ரோல் பங்க் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல், டீசல் பிடிப்பதற்காக வந்த வாகன ஓட்டிகளுக்கு, இத்தனை விலை உயர்விலும் வாகனங்களில் செல்வதால் அவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நிருபர்.
ஈரோடு டுடே