மொடக்குறிச்சி ஜூன் 4: கீழ்பவானி பாசனத்தில் உள்ள பாசன சபைகளுக்கு தாமதமின்றி தேர்தல் நடத்த வேண்டும், என்று சிறு குறு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுதந்திரராசு வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:கீழ்பவானி அணையானது (பவானிசாகர்) 1952ம் ஆண்டு அப்போதைய முதல்வர் காமராஜரால் கட்டப்பட்டது. இந்த அணை மூலம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை, காலிங்கராயன் உள்ளிட்ட பழைய பாசனத்தில் 42 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்கள் அடங்கிய கீழ்பவானி பாசனத்தில் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசன பெற்று வருகின்றன. தவிர 3 லட்சம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாக பாசனம் பெற்று வருகின்றது.கீழ்பவானி பாசன திட்டம் என்பதோடு மட்டுமல்லாது நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாகவும் இருந்து வருகின்றது. கடந்த ஆட்சி காலத்தில் குடிமராமத்து என்ற பெயரில் இந்த கால்வாய் பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டது. பல ஆயிரம் லோடு மணல் விற்கப்பட்டுள்ளது. விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்படாத பாசன சபை வைத்துக்கொண்டு அதிகாரிகளின் துணையோடு இந்த செயல் நடைபெற்றுள்ளது. எனவே பாசன சபைகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல கீழ்பவானியில் காங்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். சுற்றுச்சூழல் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மேலும் முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட தற்போதுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகளை கூண்டோடு பணியிடமாறறம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நிருபர்.
ஈரோடு டுடே