பெருந்துறை ஜூன் 4: பெருந்துறை வேளாண்மை உதவி இயக்குனர் எல்.குழந்தைவேலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:நுண்ணீர் பாசன முறையில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி அதிக அளவு பரப்பில் சாகுபடி செய்ய முடியும். இதனால் தண்ணீர் விரயமாவது தடுக்கப்படும். நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு தண்ணீர் செல்வதால் பயிர் நன்கு வளர்ந்து அதிக விளைச்சல் கொடுக்கிறது. நீர்ப்பாசனம் செய்வதற்கான நேரமும், செலவும் குறைகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் உரமிடுவதால் பயிருக்கு தேவையான நீரும், ஊட்டச்சத்துகளும் சரியான நேரத்தில் சரியான விகிதத்தில் கிடைக்க பெறுகிறது. பயறு வகை பயிர்களுக்கு தெளிப்பு அல்லது மழைத்தூவான் போன்ற நுண்ணீர் பாசன கருவிகளும், மக்காச்சோளம், கரும்பு, தென்னை போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் பாசன கருவிகளும் மேற்கொள்ளலாம்.பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவிகள் அமைக்க சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதலாக மானியமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியின் உதவி வேளாண்மை அதிகாரியிடம் கணினி சிட்டா, அடங்கல், ஆதார்அட்டை நகல், நில வரைபடம், ரேஷன்கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர் பரிசோதனை சான்று, சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருந்தால் அதற்கான சான்று போன்ற ஆவணங்களை கொடுத்து நுண்ணீர் பாசன கருவிகளை அமைத்து பயன்பெறலாம்.இவ்வாறு உதவி இயக்குனர் எல்.குழந்தைவேலு தெரிவித்துள்ளார்.

நிருபர்.
ஈரோடு டுடே