ஈரோடு சூன் 20: ஈரோடு செங்கோட்டையா வீதியை சேர்ந்தவர் சுனில்குமார். இவர் ஈரோடு பஸ் நிலையம் அருகே மேட்டூர் ரோட்டில் நான்கு தளம் கொண்ட கட்டிடத்தில் ‘ஓம் எலக்ட்ரிக்கல்’ என்ற பெயரில் மின் சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எலக்ட்ரிக்கல் கடை பூட்டியே இருந்தது. இந்நிலையில், சுனில்குமாரின் எலக்ட்ரிக்கல் கட்டிடத்தின் 4-வது தளத்தில் மின் ஓயர்கள் இருப்பு வைக்கும் குடோனில் நேற்று நள்ளிரவு கரும்புகை வந்தது. இதைப்பார்த்த காவலாளி சுனில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில், விரைந்து வந்த சுனில்குமார் கடையை திறந்து 4-வது மாடிக்கு சென்று பார்த்தபோது விற்பனைக்கு இருப்பு வைத்திருந்த மின் வயர்களில் தீ பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சுமார் 30 நிமிடம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும், இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மின் வயர்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே