ஈரோடு சூன் 18: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. கடந்த 6 நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் அணைக்கு வரும் நீர் வரத்து 2,667 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 10,178 கன அடி அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 90 அடியை மீண்டும் எட்டியுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 90.98 அடியாகவும், நீர் இருப்பு 22.2 டி.எம்.சி.,யாகவும், நீர்வரத்து வினாடிக்கு 10,178 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்கு 800 கனஅடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கனஅடி நீர் என மொத்தம் 1,000 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.மாலை 4 மணிக்கு அணையின் நீர் மட்டம் – 91.43 அடியாகவும், அணைக்கான நீர் வரத்து – 8,221 கனஅடியும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் – 1,000 கனஅடியாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தி நிருபர் ஈரோடு டுடே