ஈரோடு ஜூன் 5: ஈரோடு மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் காணொளி மூலம் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் எஸ்.முத்துசாமி, மாநில துணை தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் பேசினர்.சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், அந்தியூர் பகுதியில் 20,000 ஏக்கரில் சம்பங்கி, சென்டுமல்லி, அரளி உள்ளிட்ட பூக்கள் அதிகமாக சாகுபடியாகிறது. முழு அடைப்பால் திருமணம், கோவில் திருவிழா, வெளியிடங்களில் விற்பனையின்றி, சென்டு தயாரிப்பு ஆலைகள் இயங்காததாலும் தினமும் 25 டன் பூக்கள் விற்காமல், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டம் உண்டாகிறது.பூக்கள் விற்காததால் செடியில் இருந்து பூஜை பறிக்காமல் விடுவதால், பூஞ்சை நோய் தாக்குதல் ஏற்படும் என்பதால் ஒரு கிலோ பூவை 7 முதல் 10 ரூபாய் வரை கூலி கொடுத்து பூவை பறித்து குளம், ஏரிகளில் கொட்டுகின்றனர். எனவே இவ்விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.சென்ட் தயாரிக்கும் ஆலைக்கு அரசு முதலீடு கடன் வழங்கி, ஆலையை திறந்து, பூக்களை கொள்முதல் செய்யவும், வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். பழங்கள், காய்கறி, தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர்.
நிருபர்.
ஈரோடு டுடே