ஈரோடு ஜூன் 5:தபால் விநியோகத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து புகார் தெரிவிக்க மண்டல அளவிலான அஞ்சல் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:மண்டல அளவிலான அஞ்சல் நீதிமன்றம் கோவையில் உள்ள மேற்கு மண்டல தபால் அலுவலகத்தில் அஞ்சல் துறை தலைவர் தலைமையில் வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. எனவே அஞ்சல் துறையில் தபால் விநியோகம் தொடர்பான புகார்கள், மணியார்டர் விநியோகம், பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல், சிறுசேமிப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகள் தொடர்பாக புகார்களை உரிய ஆதாரங்கள் மற்றும் முழு விபரங்களுடன் வாடிக்கையாளர்கள் ‘உதவி இயக்குநர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மேற்கு மண்டலம், கோவை 641 002’ என்ற முகவரிக்கு வரும் 20ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். உறையின் மீது டாக் அதாலத் புகார் என்பதை குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிருபர்.
ஈரோடு டுடே