ஈரோடு ஜூன் 3: ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரானாவுக்கான தடுப்பூசிகள் போட பொதுமக்கள் குவிந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லை என்ற நிலை இருந்தது. இதனால் தடுப்பூசி மையங்களிலும் ஊசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். நேற்று 15 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. உடனடியாக அவை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.ஈரோடு மாநகராட்சி, பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கும் மருந்துகள் அனுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து ஊசி போடும் பணிகள் நடந்தன.முன்னதாகவே நேற்று ஊசி போடுவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.திண்டல், பழையபாளையம் செல்வம் நகர், முனிசிபல் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் வந்தது. அங்கு பெறப்பட்ட டோஸ்களுக்கான அளவில் மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டன. இதனால் வாக்குவாதம், பரபரப்பு ஏற்பட்டது.கொரோனா பரவாமல் இருக்க தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் போதிய இடைவெளியைக்கூட கடைபிடிக்காமல் நெருக்கி அடித்து கொண்டும், வரிசையில் நிற்க மனமின்றி அங்குமிங்கும் அலைந்து கொண்டும் இருந்தனர்.செல்வம் நகர், முனிசிபல்சத்திரம் பகுதியில் சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சமாதானம் செய்து வைத்தனர். ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் சவுண்டம்மாள் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் 15 ஆயிரம் டோஸ் தடுப்பூசி காலையில் இருந்தது. இதில் போடப்பட்டவை போக மீதி டோஸ்கள் தொடர்ந்து போடப்படும். கையிருப்பு தீரும் முன்பு அடுத்தக்கட்ட மருந்துகள் வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. எனவே தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடுப்படும். பொதுமக்கள் கூட்டம் கூடாமல் வந்து உரிய நேரத்தில் வந்து ஊசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு டாக்டர் சவுண்டம்மாள் கூறினார்.

நிருபர்.
ஈரோடு டுடே