ஈரோடு சூன் 21: ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருப்பூர், தர்மபுரி போன்ற மாவட்டங்களில் மரவள்ளி கிழங்கு அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை மரவள்ளி கிழங்கு சீசன் காலம். மாவு பூச்சி தாக்குதலால் தற்போது உற்பத்தி குறைந்து, வரத்தும் குறைந்து விலை அதிகரித்து வருகிறது.ஆனால், ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவற்றின் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு கூறியது,சீசன் காலங்களில் மரவள்ளி கிழங்கு அதிகமாக வரத்தாகும். அப்போது ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தி ஆலைகள் மரவள்ளி கிழங்கை மொத்தமாக கொள்முதல் செல்வார்கள். வரத்து அதிகமாகும்போது ஆலை நிர்வாகத்தினர் கூட்டாக சேர்த்து விலையை குறைத்து ஒரு டன் 4 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்குள் கொள்முதல் செய்வார்கள். தற்போது மாவு பூச்சி தாக்குதலுடன், உற்பத்தி குறைந்ததால் ஒரு டன் மரவள்ளி கிழங்கை 6 ஆயிரம் ரூபாய் முதல் 6 ஆயிரத்து 500 ரூபாய் வரையிலான விலையில் கொள்முதல் செய்கின்றனர்.அத்துடன் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உணவுக்காக தரமான கிழங்கு ஒரு டன் 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் வாங்கி செல்கின்றனர். சமீப காலமாக வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ஜவ்வரிசியை வாங்கி செல்ல துவங்கி உள்ளனர்.இதனால் 90 கிலோ ஜவ்வரிசி மூட்டை, 3 ஆயிரத்து 300 ரூபாயில் இருந்து 3 ஆயிரத்து 700 ரூபாய் என 400 ரூபாய் உயர்ந்துள்ளது. ஸ்டார்ச் மாவு 90 கிலோ மூட்டை 2 ஆயிரத்து 400 ரூபாயில் இருந்து 600 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. தவிர, உற்பத்தி குறைவாக உள்ளதால், முழு அளவிலான மரவள்ளி கிழங்கையும் ஆலை நிர்வாகம் வாங்கி செல்கின்றனர்.அதேநேரம், ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு விலை உயர்ந்ததால், வரும் நாட்களின் மரவள்ளி கிழங்கின் விலை ஒரு டன், 8 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயரும் வாய்ப்புள்ளது. இதனால் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நிருபர் ஈரோடு டுடே