ம்ஈரோடு ஜூன் 1:  ஈரோடு மாவட்டம் நம்பியூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய சுகாதார ஆய்வாளருக்கு போக்குவரத்து போலீஸ் ரூ.500 அபராதம் விதித்துள்ளதற்கு, சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்தனர்.ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாலுகாவில் சுகாதார ஆய்வாளராக வெங்கடேஷ் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பணிக்கு சென்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை ஸ்கிரினிங் சென்டருக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் வசித்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார்.பின்னர், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் பணி முடித்து நம்பியூர் டவுன் ரவுண்டானா வழியாக வீடு திரும்பினார். அப்போது, அங்கு பணியில் இருந்த நம்பியூர் போலீஸ், வெங்கடேஷை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாரிடம் ‘தான் சுகாதார ஆய்வாளர்’ எனக்கூறி அரசின் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். இருப்பினும், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்கு போலீசார் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கையால் சுகாதார ஆய்வாளர் மனவேதனை அடைந்துள்ளார்.இச்சம்பவத்தால் நம்பியூர் போலீசாருக்கு, ஈரோடு மாவட்ட அனைத்து சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும், சுகாதார ஆய்வாளர் பணிக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், என அச்சங்கத்தினர் சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

நிருபர்.
ஈரோடு டுடே