ஈரோடு ஜூன் 1: ஈரோடு மாநகராட்சி பகுதியில் சாலைகளில் திரிவோரை பிடித்து, மாநகராட்சி பள்ளியில் தங்க வைத்து உணவு வழங்கி வருகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் கொரானா அதிகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரானா பரவலை கட்டுப்படுத்துகின்றனர். ஈரோடு பிரப் சாலை, மாநகராட்சி தலைமை அலுவலகம் அருகே, ரயில்வே ஸ்டேஷன், மணிக்கூண்டு பகுதி, பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை ரவுண்டானா போன்ற பகுதியில், 300க்கும் மேற்பட்டவர்கள், சாலைகளிலேயே வசிக்கின்றனர்.இவர்களுக்கு வீடு இல்லை. வெளியூர்களில் இருந்தும், வீட்டைவிட்டும் வெளியே வந்து, சாலை ஓரங்களில், பழைய கட்டடங்களில் வசிக்கின்றனர். கொரானா இல்லாத சமயத்தில், எங்காவது பணிக்கு சென்றும், கோவில்களில் அன்னதானம் உண்டும், பிழைப்பு நடத்தினர். தற்போது ஊரடங்கால், பொதுமக்கள், தன்னார்வலர்கள் வழங்கும் உணவை மட்டும் சாப்பிட்டு வந்தனர். இவர்களும் கூட்டமாக வசிப்பதால், கொரானா பரவும் என்பதால், நேற்று, மாநகராட்சி நிர்வாகம், ஒரு வேனில் அவர்களை அழைத்து சென்று, கருங்கல்பாளையம் மாநகராட்சி பள்ளியில் தங்க வைத்தனர். நேற்று வரை 120 பேர் தங்க வைக்கப்பட்டனர்.இவர்களுக்கு தன்னார்வலர்கள், பொது அமைப்புகள் மூலம் மூன்று நேரம் உணவு வழங்கி, துாய்மையாகவும், சமூக இடைவெளியுடனும் வசிக்கும் ஏற்பாட்டை செய்து கொடுத்தனர்.கொரானாவுக்கான ஊரடங்கு முடியும் வரை அப்பள்ளியில் இவர்கள் தங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிருபர்.
ஈரோடு டுடே